Wednesday, December 19, 2012

நேதாஜி 2

பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங்சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்,"இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல" ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்தார், பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மேற்கொண்ட முயற்சியால் அது சாத்தியமாயிற்று. இந்திய தேசிய ராணுவத்தில் நேதாஜியின் பட்டாலியனின் கீழ் 600-க்கும் அதிகமான தமிழர்கள் இருந்தார்கள். அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று அன்று நெகிழ்ந்தார் நேதாஜி. பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு. காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தார் நேதாஜி!!! 1943-ல் நேதாஜியின் படை வெள்ளையர்களிடம் இருந்து அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது. அவற்றைக் கைப்பற்றியவுடன், நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு `ஷாஹீத்’ (தியாகம்) மற்றும் `ஸ்வராஜ்’(சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான். அந்தத் தீவுகளுக்கு ஆளூநராக தமிழர் ஒருவரைத்தான் நியமித்தார். அவர்.... கர்னல் லோகநாதன்! டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில் நேதாஜி உரையாற்றி முடித்ததும், எழுந்த ஜப்பானியப் பிரதமர் டோஜோ, ``இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நேதாஜி அந்நாட்டில் எல்லாமுமாக இருப்பார்!’’ என்றார். உடனே நேதாஜி, "சுந்திர இந்தியாவில் யார் எல்லாமுமாக இருப்பார் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்வார்கள்" என்றார். ஜனநாயகத்தின் மீதும், மக்களாட்சியின் மீதும் அவருக்கு இருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இது ஒரு சான்று. 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம்தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்துவிசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்! "ஒரு இந்தியனின் புனித யாத்திரை" இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார்.1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!!! இவரின் பிறந்த தேதி மட்டும்தான் முழுமை . இறந்த தேதி இன்னும் மர்மம்தான்

No comments:

Post a Comment