A Midsummer Night's Dream, As You Like It, The Taming of the Shrew, The Merchant of Venice போன்றவை இன்பியல் நாடகங்கள். Romeo and Juliet, Hamlet, Othello, King Lear, Julius Caesar, Antony and Cleopatra, போன்றவை அவரது புகழ் பெற்ற துன்பியல் நாடகங்கள். எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் இன்றும் காதலுக்கு முகவரி சொல்லும் மிக முக்கியமான உலக இலக்கியம் 'Romeo and Juliet' என்பதை எந்த மொழி அறிஞராலும் மறுக்க முடியாது. உலகம் முழுவதும் ரோமியோ, ஜூலியட் பெயரை உச்சரிக்காத காதலர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். அதே போன்று தன் உயிர் நண்பன் புரூட்டஸ் தன்னை கத்தியால் குத்தும்போது அதிர்ந்து போய் Et tu Brutus? அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று கேட்டு உயிர் விட்ட ஜூலியஸ் சீசரின் கதாபாத்திரத்தையும் இலக்கிய உலகம் மறக்க முடியாது.
இப்படி கனமான கதாபாத்திரங்களுக்கு வலுவான வசனங்களால் உயிர் ஊட்டியதால்தான் இன்றும் அவை உயிரோவியங்களாக உலா வருகின்றன. தமது படைப்புகள் மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் சேக்ஸ்பியர் 1616-ஆம் ஆண்டு ஏப்ரம் 23-ஆம் நாள் தாம் பிறந்த தினத்திலேயே இறந்து போனார். ஓர் இலக்கிய மேதை 52 வயதில் மறைந்து போனது இலக்கிய உலகிற்கு பேரிழப்புதான். தமிழ் இலக்கிய உலகின் அமரகவி கம்பன் என்றால் ஆங்கில இலக்கிய உலகின் அமரகவி சேக்ஸ்பியர்தான். இருவரின் படைப்புகளுமே அமர காவியங்களாக போற்றப்படுகின்றன. எழுதப்பட்டு நானூறு ஆண்டுகளுக்கு பிறகும் உயிரோட்டம் இருக்கிறது என்பதால்தான் உலக பல்கலைக்கழகங்கள் இன்றும் அவற்றை கற்பிக்கின்றன.
ஏழ்மையில் பிறந்து அடிப்படைக் கல்வியைகூட முறையாக முடிக்க முடியாத ஒருவரால் உலகப் புகழ்பெற முடிந்தது என்றால், கல்விக்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கும் நம்மால் அது முடியாதா? இலக்கியம் என்ற வானம் அவருக்கு வசப்பட்டதற்கு திறமை மட்டும் காரணம் அல்ல தன்னம்பிக்கையும்தான். நமக்குத் திறமை இருந்தால் அதனை ஒரு கூடுதல் பலமாக ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையை முதலீடு செய்வோம். திறமை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியை முதலீடு செய்வோம்....
No comments:
Post a Comment