Friday, November 6, 2015

வில்லியம் ஷேக்ஸ்பியர் 2

A Midsummer Night's Dream, As You Like It, The Taming of the Shrew, The Merchant of Venice போன்றவை இன்பியல் நாடகங்கள். Romeo and Juliet, Hamlet, Othello, King Lear, Julius Caesar, Antony and Cleopatra, போன்றவை அவரது புகழ் பெற்ற துன்பியல் நாடகங்கள். எத்தனையோ மொழிகளில் எத்தனையோ இலக்கியங்கள் வந்தாலும் இன்றும் காதலுக்கு முகவரி சொல்லும் மிக முக்கியமான உலக இலக்கியம் 'Romeo and Juliet' என்பதை எந்த மொழி அறிஞராலும் மறுக்க முடியாது. உலகம் முழுவதும் ரோமியோ, ஜூலியட் பெயரை உச்சரிக்காத காதலர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். அதே போன்று தன் உயிர் நண்பன் புரூட்டஸ் தன்னை கத்தியால் குத்தும்போது அதிர்ந்து போய் Et tu Brutus? அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று கேட்டு உயிர் விட்ட ஜூலியஸ் சீசரின் கதாபாத்திரத்தையும் இலக்கிய உலகம் மறக்க முடியாது.

இப்படி கனமான கதாபாத்திரங்களுக்கு வலுவான வசனங்களால் உயிர் ஊட்டியதால்தான் இன்றும் அவை உயிரோவியங்களாக உலா வருகின்றன. தமது படைப்புகள் மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் சேக்ஸ்பியர் 1616-ஆம் ஆண்டு ஏப்ரம் 23-ஆம் நாள் தாம் பிறந்த தினத்திலேயே இறந்து போனார். ஓர் இலக்கிய மேதை 52 வயதில் மறைந்து போனது இலக்கிய உலகிற்கு பேரிழப்புதான். தமிழ் இலக்கிய உலகின் அமரகவி கம்பன் என்றால் ஆங்கில இலக்கிய உலகின் அமரகவி சேக்ஸ்பியர்தான். இருவரின் படைப்புகளுமே அமர காவியங்களாக போற்றப்படுகின்றன. எழுதப்பட்டு நானூறு ஆண்டுகளுக்கு பிறகும் உயிரோட்டம் இருக்கிறது என்பதால்தான் உலக பல்கலைக்கழகங்கள் இன்றும் அவற்றை கற்பிக்கின்றன.

ஏழ்மையில் பிறந்து அடிப்படைக் கல்வியைகூட முறையாக முடிக்க முடியாத ஒருவரால் உலகப் புகழ்பெற முடிந்தது என்றால், கல்விக்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கும் நம்மால் அது முடியாதா? இலக்கியம் என்ற வானம் அவருக்கு வசப்பட்டதற்கு திறமை மட்டும் காரணம் அல்ல தன்னம்பிக்கையும்தான். நமக்குத் திறமை இருந்தால் அதனை ஒரு கூடுதல் பலமாக ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையை முதலீடு செய்வோம். திறமை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியை முதலீடு செய்வோம்....

வில்லியம் ஷேக்ஸ்பியர் 1

உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனிச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு 'ழ' என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத்துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு. அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக்கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்தவர்கள் சிலர். அவர்களுள் தலையாயவர் இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல அமர இலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர். அவர் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில்தான் ஏப்ரல் 23.

1564-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி லண்டனுக்கு அருகில் உள்ள ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் (Stratford-upon-Avon) என்ற சிற்றூரில் பிறந்தார் வில்லியம் ஷேக்ஸ்பியர். அவர் பிறந்தது ஏழ்மையில்தான். எட்டுப் பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது தந்தை ஜான் சேக்ஸ்பியர் கையுறை தைத்து விற்கும் வியாபாரி. தொழில் அவ்வுளவு இலாபகரமாக இல்லை என்பதால் பன்னிரெண்டாவது வயது வரைதான் சேக்ஸ்பியரால் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. அதன் பிறகு முறையான கல்வி கற்க முடியாமல் போனது. பன்னிரெண்டு வயது வரை இலத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியத்தை அவர் கற்றார். அவருக்கு பதினெட்டு வயதான போது தன்னை விட எட்டு வயது மூத்தவரான ஆன் ஹதாவேயை (Anne Hathaway) என்ற பெண்ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

23 வயதான போது அவர் பிழைப்புத் தேடி லண்டன் வந்து சேர்ந்தார் அந்த ஆண்டு 1587. அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் என்ன செய்தார் என்பது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் ஒன்றை பார்ப்போம்...அந்தக் காலகட்டத்தில் நாடகங்களுக்குப் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது லண்டன். சில இடங்களில் தினசரி நாடகங்கள் மேடையேறும். பல பகுதிகளிலிருந்து சீமான்களும், செல்வந்தர்களும் குதிரை வண்டிகளில் நாடகம் பார்க்க வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு நாடக கொட்டகையில் குதிரை வண்டிகளை காவல் காக்கும் வேலை அவருக்குக் கிடைத்தது. அப்படி குதிரைகளை காவல் காத்த ஷேக்ஸ்பியர்தான் பிற்காலத்தில் ஆங்கில இலக்கியத்தின் முகவரியை மாற்றப் போகிறார் என்பது அந்த நாடக கொட்டகையின் உரிமையாளருக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

ஷேக்ஸ்பியருக்கு ஞாபகத்திறன் அதிகம். குதிரைகளை காவல் காக்கும் அதே நேரத்தில் நாடகங்களை ரசித்துப் பார்த்த அவர் வசனங்களை மனப்பாடம் செய்துகொள்வார். இந்த வசனம் இப்படி இருந்திருக்கலாமே என்று தனக்குள் நினைத்துக்கொள்வார். இது சினிமாக் கதை போல் இருந்தாலும் ஒருநாள் அந்தச் சம்பவம் நடந்தது. அரங்கம் நிறைந்த கூட்டம், நாடகம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் வரவில்லை என்பது தெரிந்து பதறிப் போனார் நிர்வாகி.நிலமையை உணர்ந்த ஷேக்ஸ்பியர் அந்த பாத்திரத்தில் தாம் நடிப்பதாகக் கூறினார். வேறு ஒரு நேரமாக இருந்திருந்தால் அந்த நிர்வாகி நகைத்திருப்பார். அப்போது வேறு வழி தெரியாததால் நிர்வாகியும் சம்மதிக்க ஷேக்ஸ்பியருக்கு ஒப்பனை செய்யப்பட்டது. நாடகமும் தொடங்கியது.

தனக்கு முன் நடித்தவரைக் காட்டிலும், அந்த பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து பலத்த கைதட்டலையும், பாராட்டையும் பெற்றார் சேக்ஸ்பியர். சில முக்கிய காட்சிகளில் அவர் சொந்தமாகவும் வசனம் பேசினார். அந்த வரவேற்பைப் பார்த்து மகிழ்ந்துபோன நிர்வாகி தொடர்ந்து நடிக்க ஷேக்ஸ்பியருக்கு வாய்ப்புக் கொடுத்தார். சில நாடகங்களையும் அந்த நிறுவனத்திற்காக எழுதிக் கொடுத்தார் ஷேக்ஸ்பியர். 1592-ஆம் ஆண்டு லண்டன் மாநகரை பிளேக் எனும் கொடிய நோய் அலைக்கழிக்கத் தொடங்கியது. அண்மையில் ஏற்பட்ட சார்ஸ் நோய் எப்படி சில நகரங்களை முடக்கியதோ அதேபோல் பிளேக் நோயால் முடங்கிப் போனது லண்டன் மாநகரம். அதனால் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அனைத்து நாடக கொட்டகைகளும் மூடிக்கிடந்தன. நாடகக் கலைஞர்களுக்கு பிழைப்பு இல்லாமல் போனது.

லண்டனை அலைக்கழித்த அந்த நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்கும் வாய்ப்பையும், கால அவகாசத்தையும் ஷேக்ஸ்பியருக்குத் தந்தது. அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் நிறைய நாடகங்களையும், கவிதைகளையும் எழுதிக் குவித்தார். சோனட் எனப்படும் புதுவகை கவிதைகளையும் அவர் புனைந்தார். பிளேக் நோய் முடிந்தவுடன் அவரது நாடகங்கள் புத்தகமாக வெளி வரத் தொடங்கின. 24 ஆண்டு இலக்கியப் பணியில் அவர் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார் என்று சொல்வதை விட இயற்றினார் என்று சொல்ல வேண்டும். துன்பியல், இன்பியல் என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்தலாம்.

அன்னை தெரசா

தாம் வாழ்ந்தவரை அன்பும் நேசமும், பாசமும் கருணையும் சேர்ந்து அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர். இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் மறு உருவம் அன்னை தெரசா.

இரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது உலகப்போர் நிகழ்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர், இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் ஒட்டுமொத்த உருவம் அன்னை தெரசா.

1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா.

அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார்.

நலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் 'Missionaries of Charity' என்ற அமைப்பை உருவாக்கினார்.

1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.

ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா? கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும், என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்கு முக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார்.

1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது 'Missionaries of Charity' அமைப்பு தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.

1979ல் அமைதிக்கான “நோபல் பரிசு” 1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச்சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெப மாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார்.

சார்லி சாப்ளின் (Charlie Chaplin) 2

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான 'தி கிட்' 1921ல் வெளிவந்தது தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925ல் 'தி கோல்ட் ரஷ்’ என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை மேலும் அவர் கம்யுனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.

1951 ல் 'தி லைம் லைட்’ என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம் 'Los Angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.

அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது அதோடு 'Los angeles walk of fame’ என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88-ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.

"உண்மையாக சிரிக்க வேண்டுமென்றால் உங்கள் வலியை வைத்துக்கொண்டு நீங்கள் விளையாட வேண்டும், வலிக்கு உண்மையான நிவாரணமும் சரியான ஊட்ட மருந்தும் சிரிப்புதான்"

என்று கூறுகிறார் சாப்ளின். அதை கூறியது மட்டுமல்ல அதனை வாழ்ந்தும் காட்டினார். இன்று வாய்விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்..

சார்லி சாப்ளின் (Charlie Chaplin) 1

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் (Charlie Chaplin). இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமல் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.

பல்லாயிரக்கணக்கான திரை ரசிகர்களுக்கு 'நகைச்சுவை' எனும் மருந்து தந்த அந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை எவ்வளவு சோகம் நிறைந்தது தெரியுமா? சோகத்திலும் சிரித்த அந்த உன்னத கலைஞனின் கதையைத் தெரிந்துகொள்வோம்.

1889-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ந்தேதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக்கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 5 வயதே ஆனபோது சார்லி சாப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் பையனை மேடைக்கு தள்ளினார் தந்தை மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார் அதனால அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது.

அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலில் வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14-ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

1913 ஆம் ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ’ என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். 'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும், கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே '20 minutes of love’ என்ற முதல் படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் திருமண வாழ்வில் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது.

1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்துகொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின்.

புரூஸ் லீ 1


நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காக பள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டை நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனை செய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும் உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும் முடிந்திருக்காது. 1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான உயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வயது இளைஞன். அப்போது ஜான் வேய்ங், ஜேம்ஸ் டீன், சார்ல்ஸ் அட்லஸ் போன்ற நடிகர்கள் புகழின் உச்சியில் இருந்தனர். ஆனால் பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்த அந்த இளைஞன் என்ன சொன்னான் தெரியுமா? அந்த ஆக்‌ஷன் கதாநாயகர்களுக்கெல்லாம் இனி நாந்தான் மாற்று என துணிந்து சொன்னான். அப்போது அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்த இளைஞனின் சமூகம்கூட அவனை ஏளனமாக பார்த்தது. ஆனால் ஏளனங்களை ஏணிப்படிகளாக்கி அடுத்த 14 ஆண்டுகளில் வெற்றிக்கொடி நாட்டி சினிமா என்ற வாகனத்தின்மூலம் தற்காப்புக்கலைக்கு உலகலாவிய அங்கீகாரம் பெற்றுத்தந்தார் அந்த தற்காப்புக்கலை வல்லுநர் திரைப்பட நடிகர். அவரது பெயர் புரூஸ் லீ. 1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ. பிறந்தபோது அவருக்கு இடப்பட்ட பெயர் லீ ஜுன்பேன்' அவரது தந்தை லீ கோய்ன் ஒரு சீனர், தாயார் கிரேஸ் ஐரோப்பியர். சிறுவயதில் ஹாங்காங்கில் வாழ்ந்தது புரூஸ் லீயின் குடும்பம். அங்கே பெரும்பாலான சிறுவர்கள் தெருக்களில்தான் பொழுதைக் கழிப்பார்கள். அப்படி நிறைய நேரத்தைக் கழித்த புரூஸ் லீக்கு சண்டை போடுவதில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. மேலும் சுமார் 20 சீனப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றும் வாய்ப்பு புரூஸ் லீக்கு கிடைத்தது. சண்டையையும் சினிமாவையும் எடுத்துக்கொண்டு பள்ளியையும் பாடங்களையும் ஒதுக்கினார் புரூஸ் லீ. இயற்கையாகவே நன்றாக சண்டைபோடும் திறமை அவருக்கு இருந்ததால் ஒரு கும்பலுக்கு தலைவனாகவும் இருந்தார். புரூஸ் லீயின் தந்தையோ நன்கு படித்து தொழில்துறையில் ஈடுபட வேண்டும் என விரும்பினார் ஆனால் சண்டைபோட்டு எல்லோரையும் வெற்றிக்கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் புரூஸ் லீ. சிலமுறை பெரிய குண்டர்களிடம் மோதி தோல்வியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் ஒரு நல்ல தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு எழுந்தது. தன் தந்தையிடமே குங்பூ என்ற பாரம்பரிய சீன தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டார். அடிக்கடி அடிதடிகளில் ஈடுபட்டதால் புரூஸ் லீயின் கொட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர் அவரிடம் 100 டாலரைக் கொடுத்து அமெரிக்காவில் போய் எப்படியாவது பிழைத்துக்கொள் என்று கப்பலேற்றிவிட்டனர். அப்போதுதான் 18 வயது இளைஞனாக அமெரிக்கா வந்து சேர்ந்தார் புரூஸ் லீ. சியாட்டலில் இருந்த ஒரு நண்பரின் சீன உணவக விடுதியில் தங்கிக்கொண்டு தற்காப்புக் கலையை கற்றுக்கொடுக்க தொடங்கினார். அந்த விடுதியில் வேலையும் பார்த்தார். அவரது எண்ணம், செயல் எல்லாம் குங்பூ என்ற தற்காப்புக்கலையைப் பற்றியே இருந்தது. மேற்கத்திய மல்யுத்தம், ஜீடோ, கராத்தே, குத்துச்சண்டை ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு சில புதியபாணி அசைவுகளையும் சேர்த்து அவர் சொந்தமாக ஒரு தற்காப்புக்கலையை உருவாக்கினார். அதற்கு ஜீட்குன்டோ என்று பெயரிட்டார். அவரிடம் தற்காப்புக்கலையை கற்றுக்கொள்ள வந்த லிண்டா என்ற பெண்ணை மணந்து கொண்டார் புரூஸ் லீ. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த புரூஸ் லீக்கு ஹாலிவுட்டில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் ஹாலிவுட் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சோர்ந்துபோன புரூஸ் லீ ஹாங்காங் திரும்பினார்.

புரூஸ் லீ 2


தி பிக் பாஸ், ஸ்பிட் ஆஃப் பியூரி என்ற இரண்டு படங்களில் புரூஸ் லீ நடித்தார் அதில் அவர் பம்பரம்போல் சுழன்று சுழன்று காட்டிய வித்தைகளும், சாகசங்களும் ஆசிய சினிமா பிரியர்களை அசத்தின. ஆனால் ஆசியாவை அசத்திய அந்தப்படங்கள் ஹாலிவுட்டின் கடைக்கண் பார்வையைக்கூட பெறத்தவறின. அதைப்பற்றி கவலைப்படாத புரூஸ் லீ 1972 ஆம் ஆண்டில் “தி ரிட்டன் ஆப் த டிராகன்” என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார். சினிமாவின் மந்திரங்களை ஓரளவுக்கு புரிந்துகொண்டிருந்த புரூஸ் லீ திரைக்கதையைத் தானே எழுதி திரைப்படத்தை இயக்கவும் செய்தார். பொதுவாக சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் நடிகர்களை வைத்துதான் படம் எடுப்பது வழக்கம் ஆனால் புரூஸ் லீயோ கேமரா வித்தைகள் இல்லாமல் அதிவேகமாக அதேநேரத்தில் தத்ரூபமாக சண்டைப் போடக்கூடிய திறமைசாலி என்பதை அந்தப்படம் அமெரிக்கர்களுக்கு உணர்த்தியது. அதுவரை ஆசிய இளையர்கள் மட்டும் புரூஸ் லீயின் விசிறிகளாக இருந்தனர். “தி ரிட்டன் ஆஃப் த டிராகன்” படத்திற்கு பிறகு அமெரிக்க இளையர்களும் புரூஸ் லீயின் வெறித்தனமான விசிறிகளாயினர். அந்தப்படம் தந்த வெற்றிக்களிப்பில் “கேம் ஆப் டெத்” என்ற தனது அடுத்தப்படத்துக்கான வேலையை ஆரம்பித்தார் புரூஸ் லீ. அவரது பிரபலத்தையும் வசீகரத்தையும் உணர்ந்துகொண்ட ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் ஓடோடி வந்து தங்களுக்காக படம் எடுக்க வேண்டுமாறு புரூஸ் லீயைக் கேட்டுக்கொண்டனர். ஹாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டவராயிற்றே அவர். உடனே தனது சொந்த படத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஹாலிவுட்டுக்காக “என்டர் தி டிராகன்” என்ற படத்தை எடுக்கத் தொடங்கினார். அசுர வேகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு, ரீ ரெக்கார்டிங், எடிட்டிங் வேலைகள் அனைத்தும் இரண்டே மாதங்களில் முடிவடைந்தன. “என்டர் தி டிராகன்” என்ற படம் திரைக்கு வர மூன்றே வாரங்கள் இருந்தபோது எதிர்பாரத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. 1973 ஆம் ஆண்டு ஜீலை 20 ந்தேதி தன் மனைவி லிண்டாவிடம் விடைபெற்றுக்கொண்டு முடிக்கப்படாமல் இருந்த தனது சொந்தப்படமான “கேம் ஆப் டெத்” என்ற திரைப்படத்தைப்பற்றி விவாதிக்க வெளியில் சென்றார் புரூஸ் லீ. அன்று இரவே மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ் லீ. அப்போது அவருக்கு வயது 33 தான். அவர் இறந்தது பெடிட் டிங் பே என்ற ஒரு நடிகையின் வீட்டில் அதனால் புருஸ் லீயின் மரணம் குறித்து பல வதந்திகள் எழுந்தன. ஒருமுறை படப்பிடிப்பில் ஏற்பட்ட சண்டைக்காட்சியின் போது தலையில் விழுந்த அடியால் மூளை வீங்கி இறந்துபோனார் என்று மருத்துவர்கள் கூறினர். உண்மையைக் கண்டுபிடிக்க ஹாங்காங் அரசாங்கம் ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால் இன்றுவரை புரூஸ் லீ இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவிலை. புரூஸ் லீயின் மரணத்திற்கு பிறகு வெளிவந்த “என்டர் தி டிராகன்” படம் சக்கைப்போடு போட்டு 200 மில்லியன் டாலர் வசூலை அள்ளிக்குவித்தது. உலகெங்கும் பல இளையர்கள் கராத்தே பைத்தியமானார்கள். மூளை முடுக்குகளிலெல்லாம் கராத்தே பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு உலக இளையர்களின் கவணத்தை தனி ஒரு மனிதனாக தற்காப்புக்கலைப்பக்கம் திருப்பிய பெருமை புரூஸ் லீயையே சேரும். வரலாற்றின் எந்த கால கட்டத்தையும்விட எழுபதுகளில்தான் மிக அதிகமான இளையர்கள் தற்காப்புக்கலை பள்ளிகளில் சேர்ந்து பயின்றனர் என்ற உண்மையே அதற்கு சான்று. தன் கனவை நனவாக்க அயராது பாடுபட்டவர் புரூஸ் லீ. உடல்தான் தனது மூலதனம் என்று நம்பிய அவர் அதை ஒரு கோவிலாகவே வழிபட்டார். தினசரி ஓடுவது,எடை தூக்குவது என்று தனது உடலை வலுப்படுத்திக்கொண்டதோடு வைட்டமின்கள், ஜின்செங், ராயல் ஜெல்லி போன்றவற்றையும் உட்கொண்டு உடலை திடமாக வைத்துக்கொண்டார். அகால மரணம் அவரது ஆயுளை குறைக்காமல் இருந்திருந்தால் சினிமாவிலும், தற்காப்புக்கலையிலும் இன்னும் மிகப்பெரிய வெற்றிகளை குவித்திருப்பார் புரூஸ் லீ. 33 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஓர் அர்த்தமுள்ள வாழ்கையை வாழ்ந்திருக்கிறார். குண்டர் கும்பலில் இருந்தாலும், ஒழுங்காக படிக்காவிட்டாலும் தான் தேர்ந்தெடுத்த துறையில் அவர் செலுத்திய முழு கவணமும் காட்டிய ஆர்வமும் கொட்டிய உழைப்பும் சிந்திய வியர்வையும்தான் புரூஸ் லீக்கு அந்த இளம் வயதிலேயே வானத்தை வசப்படுத்தின.